மீஞ்சூர் அருகே நிபந்தனை ஜாமீனில் வந்த இளைஞரை சரமாரியாக வெட்டி கொன்ற வழக்கில் 4-பேர் கைது. மேலும் ஒருவருக்கு வலைவீச்சு. அக்கா மகளை காதலித்து திருமணம் செய்யாததால் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலையை அரங்கேற்றிய கும்பல்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த தோட்டக்காடு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (25). எண்ணூர் துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த ரஞ்சித், கடந்த 2 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் புதியதாக கார் வாங்கி ட்ராவல்ஸ் நடத்த உள்ளதாக தமது குடும்பத்தாரிடம் கூறி வந்துள்ளார்.
மேலும் இவர் மீது வழிப்பறி உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அண்மையில் தான் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.இவர் தன் மீது உள்ள வழக்குக்காக, மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு சென்று தினமும் கையெழுத்திட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 19 -ஆம் தேதி மாலை தமது நண்பர் ஒருவருடன் வெளியே சென்ற ரஞ்சித், இரவு வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் ஊர் முழுவதும் தேடி வந்துள்ளனர். அவரது செல்போனும் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. காலை வரையில் ரஞ்சித் வீடு திரும்பாத சூழலில், 20 -ஆம் தேதி காலை தோட்டக்காடு ஊர் எல்லையில் உள்ள தனியார் நிலத்தில் முட்புதரில் உள்ள தண்ணீரில் ரஞ்சித் தலை, கை, கால்களில் வெட்டப்பட்டு ரத்தகாயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீஞ்சூர் போலீசார் ரஞ்சித், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து மீஞ்சூர் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ரஞ்சித், அதே ஊரை சேர்ந்த ஆர்த்திகா ஶ்ரீ என்ற பெண்ணை காதலித்துவிட்டு பின்னர் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் அந்த பெண் கடந்த சில மாதங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் தமது நண்பர்களுடன் சேர்ந்து கொலையை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து பெண்ணின் தாய் மாமன் தினேஷ், விஷால், நவீன்ராஜ், விக்னேஷ் ஆகிய 4 -பேரை கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய உதயா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.