தமிழ்நாடு

விபத்தின் மீது விபத்து..! வேகத்தடையில் கவிழ்ந்த பைக்...! அதன் மீது மோதிய லாரி..!

Malaimurasu Seithigal TV

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த தாலிக்கால் பகுதியைச் சேர்ந்தவர் பூபாலன். கூலி தொழிலாளியான இவரது மகள் மோனிஷா (16). இவர் சோளிங்கரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் பள்ளிக்கு செல்வதற்காக தனது சகோதரருடன்  பைக்கில் பள்ளிக்குச் சென்றுள்ளார். சோளிங்கர் தக்கான் குளம் அருகே உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அருகே சென்ற போது, அங்கிருந்த வேகத்தடையில் ஏறி இறங்கிய போது வேகமாக சென்ற பைக் நிலை தடுமாறி கவிழ்ந்தது.

அப்போது பின்னால் வந்த லாரி எதிர்ப்பாராத விதமாக பைக் மீது மோதியதில் மாணவியின் வலது கால் மற்றும் இடுப்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அதேபோல் பைக் ஓட்டிச் சென்ற விஜயகுமாரின் இடது கால் உடைந்து படுகாயம் அடைந்தார். அவர்கள் இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது குறித்த தகவல் அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் மேரிஷெரின் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மருத்துவமனைக்கு சென்று மாணவியின் உடல் நலம் குறித்து விசாரித்தனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக மோனிஷா, விஜயகுமார் இருவரையும் தீவிர சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சோளிங்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.