தமிழ்நாடு

பத்திரப்பதிவு ஐ.ஜி.யின் அதிரடி உத்தரவு... பதிவு செய்த ஒரு வாரத்திற்குள் களப்பணிகளை முடிக்க வேண்டும்...

ஆவணத்தை பதிவு செய்த ஒரு வாரத்திற்குள் கட்டிட களப்பணிகளை விரைந்து முடித்து திரும்ப வழங்க வேண்டும் என அனைத்து சார்பதிவாளருக்கு, பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி சிவனருள் உத்தரவிட்டுள்ளார்.

Malaimurasu Seithigal TV
தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது. இதன் மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது என்றும், கட்டிடத்தின் மதிப்பு ரூ.50 லட்சத்துக்கு கீழ் இருந்தால் சார்பதிவாளர்களும்,  ரூ.50 லட்சம் மேல் உள்ள கட்டிடங்கள் என்றால் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் போது கட்டிடத்தின் மதிப்பு நிர்ணயம் செய்து, பத்திரம் பதிவு செய்தது சரி என்றால் உடனடியாக பத்திரத்தை திரும்ப தர வேண்டும் எனவும்,  இல்லையெனில் அந்த கட்டிடத்துக்கான மதிப்பில் நிர்ணயம் செய்த கூடுதல் கட்டணம் வசூலித்து, அதன்பிறகே திருப்பி தர வேண்டும் எனவும் அனைத்து சார்பதிவாளர்களுக்கும், பத்திரப் பதிவுத்துறை ஐ.ஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், ஆட்கள் பற்றாக்குறை, பணிப்பளு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி பதிவு அலுவலர்கள் 15 நாட்கள் முதல் 1 மாதங்களுக்கு மேலாக பல அலுவலகங்களில் ஆவணங்களை திருப்பி தராமல் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இதற்கு, கட்டிடத்தை நேரில் ஆய்வு செய்வதில் உள்ள காலதாமதம் தான் காரணம் என்றும்,  இதனால், பல அலுவலகங்களில் ஆவண பதிவு முடிந்தும் பல நாட்களாகியும் திருப்பி தரப்படுவதில்லை எனவும், இது தொடர்பாக பதிவுத்துறைக்கு ஏராளமான புகார்கள் வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஆவணம் பதிவு செய்த ஓரு வாரத்திற்குள் கட்டிட களப்பணி மேற்கொண்டு ஆவணம் திரும்ப வழங்க வேண்டும் என்றும், ஒரு வாரத்திற்கு மேல் காலதாமதம் ஏற்படக் கூடாது எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.