தமிழ்நாடு

தமிழ்நாட்டை பசுமை தமிழ்நாடாக மாற்றுவதே முதல் இலக்கு - அமைச்சர் மெய்யநாதன் பேட்டி!

Tamil Selvi Selvakumar

தமிழ்நாட்டை பசுமை தமிழ்நாடாக மாற்றுவதே முதல் இலக்கு என்று சுற்றுச் சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் தலைமையில் காலநிலை மாற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன், காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவிலேயே கார்பன் சமநிலை பெற்ற முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தவர், தமிழ்நாட்டின் வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்துவதற்காக 2 கோடியே 50 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதாக கூறிய அவர், அதனை தடுக்க கடலோர மாவட்டங்களில் கடல் நீர் உட்புகுவதை தடுக்க எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கு முதற்கட்டமாக கடல் நீர் உட்புகுவதை தடுக்க ஆய்வு மேற்கொள்ள ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.