தமிழ்நாடு

தனி நீதிபதி விமர்சனத்தை நீக்கக் கோரி நடிகர் விஜய் மனுத் தாக்கல்... இன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சொகுசு காருக்கு இறக்குமதி வரி செலுத்த விலக்கு கோரிய வழக்கில் தனி நீதிபதி விமர்சனத்தை நீக்கக் கோரி நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

Malaimurasu Seithigal TV

நடிகர் விஜய் கடந்த 2012ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்துமாறு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், ஏற்கனவே இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரியை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்தார். இதனை தள்ளுபடி செய்த தனி நீதிபதி நடிகர் விஜயை கடுமையாக விமர்சித்திருந்தார். இதனை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா மற்றும் முகமது ஷபீக் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தனி நீதிபதியின் கருத்துகள் திரும்பபெற வேண்டும் என்றும், விஜயை தேச விரோதியாக கூறுவது தவறு என்றும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கருத்துகளை நீக்கக்கோரி சம்பந்தப்பட்ட நீதிபதியிடமே ஏன் கோரிக்கை வைக்கக்கூடாது என கேள்வி எழுப்பினார். இதையடுத்து, வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்க உள்ளனர்.