தமிழ்நாடு

தமிழ்நாட்டில் நாளை முதல் கூடுதல் தளர்வுகள் அமல்..!

தமிழகத்தில்   ஒரே மாதிரியான கூடுதல்  தளர்வுகளுடன் ஜூலை 12  ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு  நாளை முதல்  அமலுக்கு வருகிறது.

Malaimurasu Seithigal TV

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் சூழலில், நாளை முதல் அனைத்து மாவட்டங்களிலும், ஒரே வகையான தளர்வுகள் அமலுக்கு வருகிறது.அதன்படி  நாளை முதல் தேநீர் கடை மற்றும் உணவகங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கேளிக்கை விடுதிகள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு பூங்காக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்கலாம் என்றும்.,தகவல் தொழில்நுட்ப சேவை சார்ந்த நிறுவனங்கள் 50 சதவிகித பணியாளர்களை கொண்டு இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாவட்டங்களுக்கு உள்ளும், மாவட்டங்களுக்கு இடையேயும் தனியார் மற்றும் அரசு போக்குவரத்து சேவை நாளை முதல் மீண்டும்  இயக்கப்படுகிறது.தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லங்கள், உறைவிடங்களை பொறுத்தவரை 50 சதவிகித வாடிக்கையாளர்களை கொண்டு இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.அனைத்து மாவட்டங்களிலும் உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள்  50 சதவிகித வாடிக்கையாளர்களை கொண்டு இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில்.,தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள்  காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், அனைத்து வணிக வளாகங்கள்,  ஜவுளிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் 50 சதவிகித வாடிக்கையாளர்களை கொண்டு இயங்கலாம் என்றும்.,அனைத்து வழிபாட்டு தலங்களும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி  திறக்கப்படுகிறது.பொழுதுபோக்கு மற்றும்  கேளிக்கை  பூங்காக்கள், 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் அரசின் நெறிமுறைகளை பின்பற்றி  திறக்கப்படுகிறது.