தமிழ்நாடு

“10 நாட்களில் அந்தக் கட்சி காணாமல் போகும்” - தவெகவில் இணைந்த அதிமுக நிர்வாகி குழந்தைவேலு! தலைமை சரியில்லையா?

கட்சியில் இருந்து எல்லோரையும் நீக்கிவிட்டால் யார் தான் கட்சியில் இருப்பார்கள்

Muthu Lakshmi

திருவள்ளூரில் அதிமுக முன்னாள் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் குழந்தைவேலு, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இந்த நிகழ்வு திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளரும், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினருமான ஆர். பிரகாசம் முன்னிலையில் நடைபெற்றது.

அவருடன், தாமரைப்பாக்கம் அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சரவணன், வெங்கல் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சிவபிரசாத், ஒன்றிய கவுன்சிலர் ஆயில்சேரி பி.ஜி. முனுசாமி, மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் நாராயணன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தவெகவில் இணைந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குழந்தைவேலு, “அதிமுக தலைமை நிர்வாகத்தின் செயல்பாடுகளில் திருப்தி இல்லாத காரணத்தாலும், கட்சியில் தொடர்ந்து நிர்வாகிகள் நீக்கப்படும் சூழல் நிலவுவதாலும் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளேன்” என்று குறிப்பிட்டார். அதிமுக தலைமையை விமர்சிக்கும் வகையில், “கட்சியில் இருந்து எல்லோரையும் நீக்கிவிட்டால் யார் தான் கட்சியில் இருப்பார்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “திருவள்ளூர் மாவட்டத்தில் அதிமுகவின் நிலை பலவீனமடைந்து வருவதால், இன்னும் 10 நாட்களில் அந்தக் கட்சி காணாமல் போகும் நிலை உருவாகும்” என்றும் அவர் கருத்து தெரிவித்தார். தான் திமுகவில் இணைந்ததாக பரவிய தகவல்கள் குறித்து விளக்கமளித்த அவர், “முன்னாள் அமைச்சர் பா. பெஞ்சமின் திமுகவில் இணைந்தபோது, நானும் அவருடன் திமுகவில் இணைந்ததாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது” என்று கூறினார்.

மேலும் “என்னுடைய முதல் எதிரியே திமுக தான்” என்றும் “என்னுடைய இந்த வளர்ச்சிக்கு காரணம் திமுகவிற்கு நான் எதிர்ப்பு தெரிவித்து களத்தில் நின்றதால் தான்” என்றும் குறிப்பிட்டார். இறுதியாக, “கட்சியில் இருந்து நான் விலகுவதற்கு காரணம் தலைமை சரியில்லை” என்றும் குறிப்பிட்டார். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.