தமிழ்நாடு

இரண்டு மடங்கு விலையுயர்ந்த பூக்கள்...போட்டி போட்டு வாங்கும் பொதுமக்கள்...!

Tamil Selvi Selvakumar

ஆயுத பூஜையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பூக்களின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.

பூக்களின் விலை அதிகரிப்பு:

நாளை ஆயுதபூஜையும், அதற்கு மறுநாள் சரஸ்வதி பூஜையும் கொண்டாடப்படவுள்ள நிலையில், மலர்கள், காய்கறிகள், பழங்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது. அதன்படி மதுரை மாட்டுதாவனி மலர் சந்தையில் பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இந்த மலர் சந்தையில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலிருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படும் நிலையில், பல்வேறு மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பூக்கள் வாங்குவதற்காக குவிந்து வருகின்றனர். இதனால் 400 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த ஒரு கிலோ மல்லிகை பூ விலை, 2 மடங்கு அதிகரித்து, ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

போட்டி போட்டு கொண்டு வாங்கும் பொதுமக்கள்:

அதேபோல், தென் தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்ற பூ விற்பனை கூடமான கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் இன்று உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து சுமார் 120 டன் பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்நிலையில் பொதுமக்களும், மொத்த வியாபாரிகளும் போட்டி போட்டு கொண்டு பூக்களை வாங்கி சென்றனர். மேலும், திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த பூ மார்க்கெட்டிலும் பூக்கள் வாங்க மக்கள் அலைமோதி வருகின்றனர்.