தமிழ்நாடு

இருக்கைக்காக அதிமுக சண்டையிடுவது சரியான முறை அல்ல.... சசிகலா பேச்சு!!!

Malaimurasu Seithigal TV

உட்கட்சி பிரச்சினையால் அதிமுக எதிர்க்கட்சியாக செயல்பட தவறிவிட்டதாக வி.கே. சசிகலா குற்றஞ்சாட்டியுள்ளார்.

செய்தியாளர் சந்திப்பு:

அண்ணல் அம்பேத்கர் 133 வது பிறந்த நாளை ஒட்டி சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வி கே சசிகலா அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வி.கே சசிகலா,  திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் மக்களுக்காக எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை எனக் கூறினார்.  

மோதலை கைவிட்டு:

மேலும் மக்களுக்காக வந்த அரசு போல திமுக அரசு செயல்படவில்லை எனவும் 5 ஆண்டுகள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என எண்ணி செயல்படுவதாகவும் வி கே சசிகலா தெரிவித்தார்.  தொடர்ந்து பேசிய அவர் ஆளுநருடன் மோதல் போக்கை கைவிட்டு விட்டு மக்களுக்காக நல்லதை செய்யும் பணியில் அரசு ஈடுபட வேண்டும் எனவும் எதிர்க்கட்சியினர் மக்கள் பிரச்சனைகளை எடுத்துச் சொல்ல தவறிவிட்டதாகவும் பேசினார். 

இரட்டை வேடும்:

சட்டசபையில் ஓ பன்னீர்செல்வம் இருக்கை விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாகவும் வி கே சசிகலா கூறினார்.  மேலும் அதிமுக செயற்குழு கூட்டம் நடத்தினாலும் நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது எனவும், கொடநாடு விவகாரத்தை தேர்தலுக்கு தேர்தல் திமுக பயன்படுத்துவதாகவும் விசாரணை மட்டுமே நடைபெறுவதாகவும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனவும் வி. கே சசிகலா தெரிவித்தார். 

அழைக்கட்டும்...:

சட்டமன்றத்தில் இருக்கைக்காக அதிமுக சண்டையிடுவது சரியான முறை அல்ல எனவும் உட்கட்சி பிரச்சனையால் அதிமுக எதிர்க்கட்சியாக செயல்படவில்லை எனவும் அவர் கூறினார்.  மேலும் திருச்சியில் ஓ பன்னீர்செல்வம் நடத்தக்கூடிய மாநாட்டிற்கு அழைத்தால் செல்வீர்களா என்ற கேள்விக்கு அழைக்கட்டும் பின்னர் சொல்கிறேன் என பதில் கூறினார்.  ஜெயலலிதா இறந்த காலகட்டத்தில் இருந்த சட்டசபை போல் தற்போது இல்லை எனவும் தியேட்டருக்கு செல்வது போல் சட்டசபைக்கு தற்போது சென்று வருவதாகவும் வி கே சசிகலா விமர்சனம் செய்தார்.