தமிழ்நாடு

69 வது பிறந்தநாளில் 69 கிலோ கேக் வெட்டிய எடப்பாடி...!

Tamil Selvi Selvakumar

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது 69 ஆவது பிறந்தநாளையொட்டி, சேலத்தில் 69 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பரிசு தொகுப்பினை வழங்கினார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது 69 ஆவது பிறந்த நாளை இன்று சிறப்பாக கொண்டாடி வருகிறார். இதனையொட்டி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு காலை முதற்கொண்டு முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

தொடர்ந்து சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 69 கிலோ எடை கொண்ட கேக்கினை வெட்டினார். இதேபோன்று பல்வேறு பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் கொண்டு வந்த கேக்குகளையும் வெட்டி கட்சி தொண்டர்களுக்கு வழங்கினார். 

இதையடுத்து அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் 125 பேர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சீருடை, புடவை மற்றும் இனிப்புகளை வழங்கினார். அதிமுகவின் பொது செயலாளராக பொறுப்பேற்ற பிறகு எடப்பாடி பழனிசாமி கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது என்பது குறிப்பிடத்தக்கது.