தமிழ்நாடு

அதிமுக ஆட்சியில் தப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை பாய்வது உறுதி! பழி வாங்கும் நடவடிக்கை அல்ல!! – அமைச்சர் பேச்சு  

கடந்த ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஏற்பட்ட குளறுபடிகளை சரி செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம். இது யார் மீதும் பழி வாங்கும் நடவடிக்கை அல்ல என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

முதுகுளத்தூர் செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், உப்பு தின்னவன் தண்ணி குடிப்பான்; தப்பு செய்தவன் தண்டனை கொள்வான். கடந்த ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஏற்பட்ட குளறுபடிகளை சரி செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம். இது யார் மீதும் பழி வாங்கும் நடவடிக்கை அல்ல. திமுக ஆட்சியில் பெண்கள் விரும்பி பயணிக்கிறார்கள் அதனால் பெண்கள் பயணிகளின் எண்ணிக்கை 40 சதவீதமாக எதிர்பார்க்கப்பட்டது, தற்போது 60 சதவீதமாக உள்ளது.

கடந்த ஆட்சியில் ஏற்பட்ட தவறுகளை சரி செய்வதே தமிழக முதல்வர் மற்றும் அனைத்துத்துறை அமைச்சர்களின் வேலையாக உள்ளது. இட ஒதுக்கீடு பெண்களுக்கான பிரச்சனை மற்றும் ஒன்றிய அரசோடு இருக்கக்கூடிய நடவடிக்கைகள் என அனைத்திலும் நிதானமாக தமிழக முதலமைச்சர் செயல்படுகிறார். எனவே இந்த ஆட்சியில் நியாயத்தை எதிர்பார்க்கலாம். புதிய பேருந்துகள் வாங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. புதிதாக 2200 பேருந்துகள் வாங்குவதற்காக ஜெர்மனியிலிருந்து கடனுதவி வர உள்ளது. எலக்ட்ரிக்கல் மற்றும் டீசல் பேருந்துகள் உட்பட 500 பேருந்துகள் வரை வாங்குவதற்கு வாய்ப்புள்ளது எலக்ட்ரிக் பேருந்துகள் வாங்குவதன் மூலம் டீசல் செலவு மிச்ச படுத்துவதற்கான வாய்ப்புள்ளது என்றார்.