தமிழ்நாடு

முதலமைச்சர் பொறுப்பு உணர்ந்து பேச வேண்டும் - எடப்பாடி பழனிசாமி அறிவுரை!

Tamil Selvi Selvakumar

அதிமுக யாருக்கும் அடிமை இல்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக, பாமக, விசிக உள்ளிட்ட பல்வேறு மாற்றுக்கட்சியில் இருந்து விலகிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் பிரச்னையை அரசிடம் எடுத்துச் செல்லும் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக உள்ளது என கூறினார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்பதை அதிமுகவின் இலக்கு என குறிப்பிட்டார். 

ரவுடி போல பேசும் முதலமைச்சரால் தமிழ்நாட்டில் ரவுடிகள் தலைதூக்குவார்கள் என விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, தகுதி அறிந்து, பொறுப்புடன் கருத்துக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவிக்க வேண்டும் என அறிவுரை கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஊழல் வழக்கில் கைதான செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்ந்தால், மக்கள் எப்படி அரசியலை மதிப்பார்கள் என கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டில் 25 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.