தமிழ்நாடு

சம்பத் மீதான வழக்கு...திடீரென போராட்டத்தில் குதித்த அதிமுகவினர் ...பரபரப்பான கடலூர்..!

Tamil Selvi Selvakumar

முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மீதான வழக்கு பதிவை கண்டித்து கடலூரில் அதிமுகவினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கைகலப்பாக மாறிய பிரச்னை:

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத்திடம் குமார் என்பவர் நேர்முக உதவியாளராக இருந்து வந்தார். இவர்களுக்குள் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த பிரச்னை குறித்து சம்பத் ஆதரவாளர்களுக்கும், குமாரின் உதவியாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது.

எம்.சி.சம்பத் மீது வழக்கு:

இதில் குமாரின் மாமா ராமச்சந்திரன் என்பவர் காயமடைந்த நிலையில், அவர் பண்ரூட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் 8 பிரிவின் கீழ் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில் குறிப்பாக, எம்.சி.சம்பத் மீதும், அவரது சகோதரர் தங்கமணி உள்பட 12 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 2 பேர் நேற்று கைதுசெய்யப்பட்டனர். 

போராட்டத்தில் குதித்த அதிமுகவினர்:

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மீது போடப்பட்டிருப்பது பொய் வழக்கு என நேற்று முதல் அதிமுகவினர் தெரிவித்து வந்த நிலையில், இன்று இதனை கண்டித்து கடலூர் மாவட்ட பிரதான சாலையில் அதிமுகவினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

எம்.சி.சம்பத் மீதான வழக்கை வாபஸ் பெறக்கோரி கடலூர் பிரதான மறித்து அதிமுகவினர் போராட்டம் நடத்துவதால், அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து போராட்டக்காரர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும், போராட்டம் தொடர்வதால், அங்கு 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், இந்த சாலை மறியல் போராட்டத்தால் கடலூரில் பரபரப்பு நிலவி வருகிறது.