Anbil Mahesh jail news 
தமிழ்நாடு

'மனிதத்தன்மையுடன் நடத்துங்க; சாப்பாடு சரியில்ல' - நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் தரப்பு வாதம்!

காவல்துறையினர் விசாரணையில் இருந்து எதையும் மறைக்க தேவை எதுவும் இல்லை என்றும் அவர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vinvizhi Leninton

திமுக ஆட்சிக் காலத்தில் முன்னாள் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ரூ.100 கோடி மதிப்பிலான தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளிப்பதாக கூறிய மோசடி புகார் தொடர்பாக, பெருநகர சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) அவரை கைது செய்தது.

ரூ.100 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக கூறப்படும் இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துகுமார் தலைமறைவாகி இருந்த நிலையில் அவரும் காவல்துறையினரிடம் சரணடைந்தார். மேலும், அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு சிறையில், முதல் வகுப்பு வழங்கப்பட்டது. அதில் அவருக்கு, வழக்கமான உணவுடன் கூடுதலாக சப்பாத்தி, சாதாரண கைதிகளை விட அதிக அளவில் பால், தேநீர் வழங்கப்படும், வாரத்தில் 3 நாட்கள் சிக்கன் கொடுக்கப்படும், தனி அறை, கட்டில், மெத்தை, மின்விசிறி, நாற்காலி, மேஜை உள்ளிட்ட வசதிகள் இருக்கும். நாளிதழ்கள், தொலைக்காட்சி, கொசுவலை உள்ளிட்ட கூடுதல் வசதிகள் கிடைக்கும். மேலும், சிறைக் கண்காணிப்பாளர் அனுமதியுடன் வெளியில் இருந்து ஹாட் பாக்ஸ், தட்டு பயன்படுத்த அனுமதிக்கப்படும்.

கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள், பிரத்யேக மருத்துவ பரிசோதனை வசதிகளும் கிடைக்கும், சாதாரண கைதிகளுடன் அடைக்கப்படாமல் காற்றோட்டமான தனி அறை வழங்கப்படும், சொந்த செலவில் உணவை வாங்கிக் கொள்ளலாம், சாதாரண கைதிகளை விட அதிகமான முறை உறவினர்கள், வழக்கறிஞர்களை சந்திக்க அனுமதி அளிக்கப்படும். இதுபோன்ற சலுகைகளே முதல் வகுப்பு சிறையில் வழங்கப்படுகிறது. இதுவே, தற்போது அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் வழங்கப்படுகிறது.

தற்போது அவர், "சிறையில் தனக்கு சரியான கவனிப்பு இல்லை" என்று அதாவது சரியாக உணவு வழங்காததால் 2 முதல் 4 கிலோ வரை குறைந்துள்ளதாக அவர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். மேலும், நீதிமன்றம் கூறிய உணவு கூட வழங்கப்படவில்லை என்றும் குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி தான் என்றும், அன்பில் மகேஷ் தூங்கும் போது கூட விளக்கை எரியவிட்டுள்ளனர் என்றும் அவரது தரப்பு மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட அஜ்மல் கசாப்க்கு கூட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டன, ஆனால் தனக்கு உரிய வசதி செய்து தரவில்லை என்று அன்பில் மகேஷ் தரப்பில் இருந்து வாதிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, கைது செய்யப்படுவதற்கு நீண்ட நாட்கள் முன்னரே விசாரணை மற்றும் சோதனை நடத்தப்பட்டதாகவும், விசாரணை மற்றும் ரெய்டிற்கு தங்கள் தரப்பில் இருந்து முழு ஒத்துழைப்பு தந்ததாகவும், வேறு ஏதேனும் ஆவணங்கள் தேவைப்பட்டாலும் தருவதாகவும் அன்பில் மகேஷ் தரப்பில் இருந்து வாதிடப்பட்டுள்ளது. கூடுதலாக, காவல்துறையினர் விசாரணையில் இருந்து எதையும் மறைக்க தேவை எதுவும் இல்லை என்றும் அவர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அன்பில் மகேஷ் தரப்பில் இருந்து, மாநில நலனுக்காக நானும் எனது குடும்பமும் ரத்தத்தையும் வியர்வையும் அளித்துள்ளோம். எங்கும் தப்பிவிட மாட்டோம், மனித்தன்மையுடன் நடத்துங்கள் என்றும் அவர் தரப்பில் இருந்து வாதிடப்பட்டுள்ளது. மேலும், வீட்டு உணவு கேட்டு மனு தாக்கல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.