தமிழ்நாடு பாஜக -வின் முன்னாள் தலைவரான அண்ணாமலை, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் முன்னாள் பி.ஆர்.ஓ நடராஜன் -க்கு தொடர்பு இருப்பதாக கூறி சர்ச்சையை கிளப்பியிருந்தார், அது தற்போது அவருக்கே வினையாக மாறி உள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தன்னை தொடர்பு படுத்தி பேசியதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பி.ஆர்.ஓ நடராஜன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் தண்டனை குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, குற்றவாளி ஞானசேகருக்கு அந்தப் பகுதியில் வசித்து வரும் கோட்டூர் சண்முகம் என்பவருடன் என்பவருடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும், கோட்டூர் சண்முகம் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பி.ஆர்.ஓ நடராஜனின் நெருங்கிய நண்பர் என குறிப்பிட்டிருந்தார்.
பாலியல் வன்கொடுமை சம்பவம் நடைபெற்ற காலத்தில், ஞானசேகரன் கோட்டூர் சண்முகத்திடம் பேசியதாகவும் கோட்டூர் சண்முகம் நடராஜனிடம் பேசிய சிசிடிவி ஆதாரங்களை அவர் பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டார்.
அண்ணா பல்கலைகழகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்ட தன்னை குறித்து பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி தனக்கு மன உலைச்சல் ஏற்படுத்தியதால் தனக்கு 50 லட்சம் ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு அண்ணாமலைக்கு நடராஜன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அதில் கோட்டூர் சண்முகம் தன் நீண்ட கால குடும்ப நண்பர் எனவும் அவருடன் தான் தொலைபேசியில் பேசியதை வைத்து தன்னை இந்த குற்றத்தில் தொடர்பு படுத்தி பேசியதால் அண்ணாமலை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
தவறும் பட்சத்தில் அண்ணாமலைக்கு எதிராக மான நஷ்ட வழக்கு தொடர நேரிடும் எனவும் அவர் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.