தமிழ்நாட்டில் வருமான வரித்துறை சோதனை என்பது புதிதல்ல, ஆனால் தற்போது நடைபெறும் முறையை பார்த்தால் நிச்சயம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நினைப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை, மயிலாப்பூரில் உள்ள ஆர்.ஆர்.சபாவில் பாஜக சமூக வலைதள ஆதரவாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சின், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, துணை தலைவர்கள் கரு. நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாலை, தமிழகத்தில் ரெய்டு நடப்பது என்பது புதியதல்ல. ஆனால், தற்போது ஒவ்வொரு இடங்களிலும் அதிக நாட்கள் ரெய்டுகள் நடைபெறுகின்றன. அதன் தொடர்ச்சியாக ஒரு சில நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. பொதுவாக லஞ்ச ஒழிப்புத்துறையை பொறுத்தவரையில், அவர்களால் பெரிய தண்டனை பெற்று தர முடியாது. ஆனால், ED (அமலாக்கத்துறை) மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். எனவே, தற்போது நடைபெறும் முறையை பார்த்தால் நிச்சயம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நம்புவதாக அண்ணாமலை தெரிவித்தார்.
இதையும் படிக்க : பயிற்சி மருத்துவரை தாக்கிய நோயாளி...சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பரபரப்பு!
தொடர்ந்து பேசிய அவர், எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கில் இந்த ரெய்டு நடப்பதாக கூறுவதை ஏற்றுகொள்ள முடியாது என்றவர், DVAC (விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம்) மூலம் எந்த ஆளும் கட்சி அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என நாங்களும் கேட்கலாம் என்று கூறினார். தவறு நடைபெறுவதாக தகவல் கிடைக்கும் இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்கின்றனர், அதில் அரசியல் நடைபெறவில்லை என்று கூறினார்.
முன்னதாக, கடந்த சில தினங்களாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் மற்றும் அவரது உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.