பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் ஆஜராக சைதாப்பேட்டை நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தி.மு.க. மூத்த நிர்வாகிகளின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக கூறிய பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அவர்களது சொத்துகள் தொடர்பான பட்டியலை ஏப்ரல் மாதம் 14-ந்தேதி வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, எந்தவித ஆதாரமும் இல்லாமல் அவதூறு ஏற்படுத்தும் வகையில் தவறான புள்ளி விவரங்களுடன் சொத்துப் பட்டியலை வெளியிட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தரப்பில் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 17-வது நீதித்துறை நடுவர் அனிதா ஆனந்திடம் அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜூலை 14ஆம் தேதி பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
ஜூலை மாதம் இரண்டாம் வாரத்தில் திமுகவின் இரண்டாம் கட்ட ஊழல் பட்டியலை வெளியிட இருப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்த நிலையில் இந்த விசாரணை முன்னுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.