ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடாது என திட்டவட்டமாக தெரிவித்த அண்ணாமலை, அதிமுக சார்பாக ஒரே வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டுமென வலியுறுத்தினார்.
சென்னை, தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக நிலைப்பாடு குறித்து அறிவித்தார். அப்போது பேசிய அவர், ஜே.பி.நட்டாவின் அறிவுறுத்தலின் பேரில் ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்-ஐ சந்தித்ததாகவும், இரு தரப்பினரையும் பிரித்து குளிர் காயும் நோக்கம் பாஜகவினருக்கு கிடையாது எனவும் தெரிவித்தார்.
மேலும் கூட்டணி கட்சியின் உட்கட்சிப் பிரச்சனையில் என்றும் பாஜக தலையிடாது என கூறிய அவர், கூட்டணி தர்மத்தின் படி தேர்தலில் அதிமுக வேட்பாளரே நிற்க வேண்டும் என்பது தங்களது விருப்பம் எனவும் கூறினார்.
இதையும் படிக்க : பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் திடீர் உயிரிழப்பு...! காரணம் இதோ...
அதுமட்டுமல்லாமல், தேர்தலில் வலிமையான மற்றும் உறுதியான ஒரு வேட்பாளர் நிறுத்த வேண்டும் என்பதுதான் தங்களின் நிலைப்பாடு என கூறிய அவர்ம் அதிமுக சார்பில் 2 வேட்பாளர்கள் களமிறங்கினால் வாக்குகள் பிரியும், ஆளுங்கட்சி வெற்றி பெறும் என தெரிவித்தார்.
அதிமுக சுயேட்சையாக போட்டியிட்டால் தேசிய கட்சியாக பாஜக எப்படி ஆதரவளிக்கும் என கேள்வி எழுப்பிய அண்ணாமலை, இரட்டை இலை சின்னத்தில் களமிறங்கும் வேட்பாளர் வெற்றி பெற பாஜக உழைக்கும் என உறுதியளித்தார்.
பாஜக குறித்து பொன்னையன் கருத்து தெரிவித்தது குறித்த கேள்விக்கு பதிலளிக்க விரும்பவில்லை என தெரிவித்த அண்ணாமலை, பாஜகவை புரிந்துகொள்ள கண்ணாடி அணிந்து சரியாக வரலாற்றை படிக்க வேண்டும் என சாடினார்.