பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே அண்ணாமலை, கட்சியில் இருந்து விலகுவதாக செய்திகள் வெளியாகின. கடந்த திங்கட்கிழமை டெல்லி சென்ற அண்ணாமலை, மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து, தான் கட்சியில் இருந்து விலக்குவதற்கான காரணத்தை 5 பக்க விளக்க கடிதமாக வழங்கியுள்ளார். ஆனால் கட்சியின் தலைமை அவர் விலகல் கடிதத்தை ஏற்க மறுத்து, பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து வந்த நிலையில் முழுமையாக பாஜகவில் இருந்து விலகினார்.
இந்நிலையில் அண்ணாமலை ஒரு முக்கிய அறிவிப்பை நேற்று தன்னுடைய சமூக வலைத்தள பதிவில் தெரிவித்துள்ளார். அதில் “இன்று மதியம் 12 மணி அளவில், சமூக வலைத்தளங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும், ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்” என தெரிவித்திருந்த நிலையில் இன்று நேரலையில் உரையாடிய அண்ணாமலை புதிய அரசியல் இயக்கத்தை தொடங்குவதாக அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
அப்போது பேசிய அண்ணாமலை “ நான் ஒரு பெருமைமிகு இந்தியன், பாரம்பரியமான தமிழன்.. ஒரு போதும் தமிழ்நாட்டை நான் எங்கு விட்டு கொடுத்தது கிடையாது. 18 மாதங்களாக பாரதிய ஜனதா கட்சியுடனான கருத்து வேறுபாடு பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். இப்போது ஆனந்தமாக ஒரு புதிய அரசியல் இயக்கத்தை தொடங்குகிறேன். நிச்சயமாக நமது கட்சி அடுத்த தேர்தலில் போட்டியிடும். அதற்கு முதலில் அனைவரையும் அரசியல் கற்றுக்கொள்ள வேண்டும். எல்லோருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் ஒரு குடும்பத்தின் கையில் மட்டும் அதிகாரம் இருப்பதாக இருக்கக் கூடாது எல்லோருக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் புதியவர்கள் வந்து கொண்டே இருக்க வேண்டும்...
ஒரு தூய்மையான அரசியலை முன்னெடுக்க வேண்டும்... நாம் யாருக்கும் போட்டி கிடையாது ஆளுங்கட்சி இருக்கிறார்கள் நிறைய எதிர்க்கட்சிகள் இருக்கிறார்கள்.. எங்களுடைய கொள்கை என்ன என்பதை வருங்காலத்தில் சொல்லுவோம். என்னோடு வரவேண்டும் என நினைப்பவர்கள் கொஞ்சம் நிதானத்தோடு பொறுமையோடும் இருக்க வேண்டும். தமிழகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தோடு நாம் செயல்பட இருக்கிறோம். இந்த கட்சியில் யாருக்கும் நிரந்தர பதவிகள் இருக்காது. எனக்கு கல்ட் அரசியலில் விருப்பமில்லை. புதிய பாதையில்.. புதிய இயக்கத்தில் பயணிக்க உள்ளோம்” என தெரிவித்திருக்கிறார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்