தமிழ்நாடு

பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்ட மற்றோரு பள்ளி மாணவி...

கரூர் மாவட்டம் வெண்ணைமலை அருகே பாலியல் தொல்லை காரணமாக கடிதம் எழுதி வைத்து விட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Malaimurasu Seithigal TV

வெண்ணைமலை அருகேயுள்ள அரசு காலனி பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி, அருகேயுள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர். 
 
விசாரணையில், மாணவி எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று கிடைத்தது. அதில் பாலியல் தொல்லை காரணமாகவே தாம் தற்கொலை செய்து கொள்வதாகவும், தனக்கு தொல்லை கொடுத்தது யார் என குறிப்பிட கூட தனக்கு பயமாக உள்ளது எனவும் எழுதி வைத்துள்ளார்.  இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதனிடையே கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், மாணவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.