தமிழ்நாடு

2-ம் நிலை காவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!

Tamil Selvi Selvakumar

இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் ஆசிரியரின் வாரிசுகளுக்கு பணிநியமன ஆணைகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.  

சீருடைப் பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை காவலர்கள் 143 பேருக்கு, பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலாளர் அமுதா, காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தொடர்ந்து நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 கோடியே 86 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள, 303 திறன் வகுப்பறைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி  காட்சி மூலம் திறந்து வைத்தார். அத்துடன் பள்ளிக் கல்வித்துறையில் பணி காலத்தில் உயிரிழந்த 61 பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார். 

இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மகேந்திரா ஆராய்ச்சி மையத்தில், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில், நிறுவப்பட்டுள்ள மின்கலன் பரிசோதனை ஆய்வகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.