stalin vs eps  
தமிழ்நாடு

அதிமுக எம்.எல்.ஏ -களுக்கு குறி!? திமுகவை நோக்கி நகரும் மறவர் சமூக வாக்குகள்!? ஸ்டாலின் போட்ட பிளான்? சிக்கலில் இபிஎஸ்!

தற்போது உள்ள சூழலில் எடப்பாடியா? ஸ்டாலினா? என்று வந்தால், ஸ்டாலினை ....

மாலை முரசு செய்தி குழு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்களின் வெற்றியை உறுதி செய்ய பம்பரமாக சுழன்று கொண்டு இருக்கின்றன. ஆளுங்கட்சியான திமுக ஆட்சிக் கட்டிலிருந்து இறங்கத் தயாராக இல்லை. அவர்களின் கூட்டணிக்குள் சலசலப்புகள் இருந்தாலும் அது இன்னும் பொதுவெளிக்கு வரவில்லை. ஆனால், பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக -வின் சண்டை மூலைமுடுக்குகளில் எல்லாம் பேசுபொருளாகியுள்ளது.

அதிமுக -வில் நிலவும் உட்கட்சி பூசல்!!

அதிமுக எப்போது எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டுக்குள் சென்றதோ அப்போதிலிருந்து ஓபிஎஸ் தனது மவுசை இழந்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் தனது ஆதரவாளர்களை திரட்டி  "அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு" என்ற பெயரில் தனிக்குழு அமைத்து செயல்பட்டு வருகிறார் ஓபிஎஸ்.

அதிமுகவில் இருந்தாலும் கடந்த பல ஆண்டுகளாக பாஜகவுடன்  ஓ.பன்னீர்செல்வம் மிகவும் நெருக்கம் காட்டி வந்தார். தனது அரசியல் பிதாமகராகவே பிரதமர் மோடியை நினைத்துக்கொண்டார். அதாவது பிரதமர் கூறியதால்தான் துணை முதல்வர் பொறுப்பை ஏற்றேன் என்று சொல்லும் அளவுக்கு மோடிக்கும் அவருக்கும் நெருக்கம் இருந்தது. இதனிடையே எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பு வகிக்க எதிர்ப்பு தெரிவித்ததால் 2022ஆம் ஆண்டு கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக நீக்கப்பட்டார்.  நீக்கப்பட்ட கையோடு அவர் முதல்வர் மு.க.ஸ்டாலினை தான் சந்தித்தார்.

செங்கோட்டையன் நீக்கம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக கருத்து வேறுபாடு இருந்த நிலையில் கடந்த பிப்ரவரி 9 -ஆம் தேதி அன்னூரில் நடைபெற்ற அவினாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றியதற்காக எடப்பாடி பழனிச்சாமிக்கு அத்திக்கடவு போராட்ட குழுவினரால் பாராட்டு விழா நடைபெற்றபோது மோதல் வெளிப்படையானது. 

ttv,ops,sengottaiyan

இதற்கு இடையில் கடந்த செப் 15ஆம் தேதிக்குள் கட்சியின் பொதுச்செயலாளர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை ஒன்றிணைக்க முயற்சி எடுக்க வேண்டும் என கெடு விதித்து எடப்பாடியை கடுப்பேற்றியிருந்தார். அப்போது எடப்பாடி தேர்தல் சுற்றப்பயணத்தில் இருந்தார், ஆனாலும் கூட கட்சி நிர்வாகிகளோடு ஆலோசித்து செங்கோட்டையனை கழக அமைப்பு செயலாளர் பொறுப்பிலிருந்தும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பிலிருந்தும், நீக்கி உத்தரவிட்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களோடு தொடர்புகொள்ளக்கூடாது எனவும் எச்சரித்திருந்தார். ஆனாலும் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோருடன் பொதுவெளியில் செங்கோட்டையனை பார்த்த இபிஎஸ் கடுப்பில் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கினார்.

முக்குலத்தோர் கூட்டணி

இந்நிலையில்தான் ‘புதிய கூட்டணி’ உருவாக உள்ளதாக பேச்சுக்கள் எழுந்தன. ஒருவேளை டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் ஆகியோர் கூட்டணி அமைத்தால், முக்குலத்தோர் வாக்குகளை நிச்சயம் பெறுவார்கள். இவர்களில் செங்கோட்டையனை தவிர மற்றவர்கள் அனைவரும் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அது நிச்சயம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடிக்குதான் பின்னடைவாக அமையும் என அப்போதே ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

மனோஜ் பாண்டியன் ராஜினாமா!

இந்நிலையில்தான், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும் ஆலங்குளம் எம்எல்ஏ-வுமான மனோஜ் பாண்டியன் திமுகவில் செவ்வாய்க்கிழமை காலை இணைந்தார்.

Manoj pandian with stalin

இந்த நிலையில், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவை சந்தித்து, தனது அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்வதற்கான கடிதத்தையும் வழங்கினார். ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டதால், அதிமுகவிலிருந்து மனோஜ் பாண்டியன் நீக்கப்பட்ட நிலையில், பாஜகவின் கிளை அலுவலகமாக அதிமுக செயல்படுவதால், திமுகவில் இணைவதாக பேசியுள்ளார்.

இப்படி பல சிக்கல்கள் நிலவும் அதிமுக -வின் உட்கட்சி விவகாரம் குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார் அதில் அவர் பேசியதாவது, “நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் இனி அதிமுக அரசியல் எடுபடாது என்பது மனோஜ் பாண்டியன் உணர்ந்த பின்னரே, திமுக பக்கம் சென்றுள்ளார். மேலும் பாஜக -வின் நயினார் நாகேந்திரனுக்கும் மனோஜ் பாண்டியனுக்கும் இடையே உள்ள பூசல் மற்றொரு காரணம், திமுக பக்கம் செல்வதுதான் Safer option என்பதை உணர்ந்து மனோஜ் பாண்டியன் அங்கு சென்றுள்ளார்.

மேலும் தென் மாவட்டங்களில், எடப்பாடிக்கும் பெரிய மவுசு இல்லை. அந்த பகுதியில் அதிகளவு வாக்கு வங்கியாக இருக்க கூடிய மறவர் சமூக மக்கள் பாரம்பரியமாக அதிமுக -வுக்கு வாக்களிக்க கூடியவர்கள்தான். ஆனாலும் தற்போது உள்ள சூழலில் எடப்பாடியா? ஸ்டாலினா? என்று வந்தால், ஸ்டாலினை ஏற்கக்கூடிய மனப்பக்குவத்தில்தான், அந்த மக்கள் உள்ளனர்” என பேசியுள்ளார்.

ஸ்டாலின் போடும் கணக்கு!

ஓபிஎஸ் அணியில் உள்ள மனோஜ் பாண்டியனுக்கு எம்.எல்.ஏ சீட்டுக்கான உத்தரவாதம் அளித்து ஸ்டாலின் அழைப்பதன் பின்னணி என்ன என கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு பதில் அளித்த ரவீந்திரன் துரைசாமி, “திமுக -வை பலப்படுத்துவதுதான் பிரதான நோக்கம், அதிலும் குறிப்பாக தாங்கள் வலிமை குறைவாக உள்ள இடங்களில் உள்ள அதிமுக எம்.எல்.ஏ -க்களை டார்கெட் செய்கின்றது திமுக. இன்னொரு உதாரணமாக நாம் செம்மலை சொல்லலாம், வன்னியர்கள் மத்தியில் திமுக மீது வெறுப்பு இருப்பதாக ஒரு பிம்பம் உள்ளது. அதற்காக செம்மலை வந்தாலும் ஸ்டாலின் ஏற்பார். இதுபோன்ற உள்ளூர் தலைமைகள் குறித்து ஸ்டாலினிடம் ஒரு பட்டியலே உள்ளது.” என அவர் பேசியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.