தமிழ்நாடு

அரியவகை மரத்தை கல்லூரி வளாகத்திற்கு மாற்றியதால் பரபரப்பு...

நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக எடுக்கப்பட இருந்த அரியவகை மரத்தை வேரோடு பிடுங்கி கல்லூரி வளாகத்திற்குள் மாற்றிய தாவரவியல் ஆசிரியர் மற்றும் சமூக ஆர்வலர்களால் பரபரப்பு.

Malaimurasu Seithigal TV

தேனி | போடி மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஏல விவசாய சங்க கல்லூரியில் ஆங்கிலேயர் காலத்தில் யானை பிடுக்கு எனும் ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த மரம் வளர்க்கப்பட்டது.

இந்த மரத்தின் காயிலிருந்து சரும பிரச்சனைக்கான மருந்து தயாரிப்பதற்கும் மிகவும் வலிமையான இந்த காயினை துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு பயன்படுத்தவும் அந்த விதை கலையும் காய்களையும் துப்பாக்கி தோட்டாக்களாகவும் பீரங்கி குண்டுகளாகவும் பயன்படுத்துவதற்காக ஆங்கிலேயர்கள் வளர்த்தனர்.

அந்த மரத்தின் நாற்று ஒன்று ஓடை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு கல்லூரி அருகாமையில் தானாகவே முளைத்து மிகப் பிரமாண்ட மரமாக  வளர்ந்திருந்ததுஇரவு நேரத்தில் மட்டுமே பூக்கும் தன்மை கொண்ட இந்த மரம் மிக பிரம்மாண்டமாகவும் விவசாயிகள் மாணவ மாணவிகளுக்கு நிழல் தரும் மரமாகவும் அப்பகுதியின் அடையாள சின்னமாகவும் இருந்து வந்தது.

தற்போது போடி மூணாறு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த மரத்தினை அகற்றுவதற்கு நெடுஞ்சாலைத்துறையினர் முயற்சி செய்தனர். இதனை அறிந்த கல்லூரி  தாவரவியல் பேராசிரியர் மோகன் மற்றும் மரத்தின் அருகாமையில் டீக்கடை வைத்திருக்கும் முருகன் என்ற சமூக ஆர்வலரும் கல்லூரி முதல்வர் மற்றும் நிர்வாகிகளின் அனுமதியுடன் மரத்தினை வேரோடு கல்லூரி வளாகத்திற்குள் நட்டு வைப்பதற்கு திட்டமிட்டு ராட்சச இயந்திரங்கள் உதவியுடன் மரத்தினை வேரோடு சுமார் 600 மீட்டர் தூரம் எடுத்துச் சென்று கல்லூரி வளாகத்தில் நட்டு வைத்தனர்.

அந்தப் பகுதியின் அடையாளச் சின்னமாக இருந்த வந்த அரிய வகை யானை பிடுக்கு  மரத்தின் நிழலையும் அழகையும் ரசித்த பொதுமக்கள் மரம் அழிவைக் கண்டு சோர்ந்த நிலையில்  மரத்தினை இடமாற்றம் செய்து உயிர்பித்த தாவரவியல் பேராசிரியர் மோகன் மற்றும் சமூக ஆர்வலர் முருகனுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த அரியவகை யானை பிடுக்கு மரம் பற்றிய செய்தி தொகுப்பினை கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர்  மாதம் நமது மாலை முரசு தொலைக்காட்சியில் செய்தி வெளியிட்டு இருந்தோம்ஆப்பிரிக்க நாடுகளில் இந்த மரங்கள் கடவுளாக போற்றி பாதுகாக்கப்படுகிறது.

மழை நீரில் அடித்து வரப்பட்டு தானாக முளைத்து மரமாக மாறிய இந்த மரம் தற்போது மீண்டும் பழைய இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவு செய்யப்பட்ட நிகழ்வு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.