தமிழ்நாடு

முதல்வருக்காக காவல்துறை வேலை செய்கிறதா? - ஆவேசத்துடன் ஆதவ் அர்ஜுனா! தலைமைச்செயலகத்தில் புகாரளித்த புஸ்ஸி ஆனந்த்..

தவெக சார்பில் வில்லிவாக்கத்தில் நடத்தப்பட்ட தேர்தல் பொதுக்கூட்டத்தில் மர்ம நபர் ஒருவர் கண்ணாடி பாட்டில்களை வீசியதால்..

மாலை முரசு செய்தி குழு

தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா இருவரும் தலைமைச்செயலத்தில் புகாரளிக்க சென்றனர். மேலும், காவல் துறையினர் தவெக பிரச்சாரத்திற்கு போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்று அப்புகாரில் தெரிவித்துள்ளனர். கொளத்தூரில் மற்றும் ஐயனாவரத்தில், தவெக சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று தலைமை செயலகத்தில் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் என். ஆனந்த் புகைரளித்துள்ளார். மேலும், தவெக பரப்புரைக்கு காவல்துறையினர் உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை, களங்கம் விழைவித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த புகாரினை அளித்துள்ளனர். நேற்று (மார்ச் 31ம் தேதி) தவெக சார்பில் வில்லிவாக்கத்தில் நடத்தப்பட்ட தேர்தல் பொதுக்கூட்டத்தில் மர்ம நபர் ஒருவர் கண்ணாடி பாட்டில்களை வீசியதால் பெண் ஒருவர் படுகாயமடைந்தார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை குறித்தும் தனது புகாரில் விரிவான விளக்கத்தை அளித்துள்ளனர்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஆதவ் அர்ஜுனா, "ஸ்டாலின் அவர்களும், உதயநிதி ஸ்டாலினும் பிரச்சாரங்களுக்கு செல்லும்போது, தங்களது வாகனங்களுக்கு மேல் நின்று மக்களை பார்த்து கைகளை அசைகின்றனர். ஆனால், நாளை திருச்சி விமான நிலையத்தில் இருந்து, வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு தனது பிரச்சாரத்தை மூலக்கடையில் இருந்து தொடங்க அனுமதி அளித்துள்ளனர். ஆனால், விஜய் தனது வண்டி மீது ஏறி மக்களை பார்த்து கைகளை அசைக்கக் கூடாது என்றும், அதனை 'ரோடு ஷோ' என்றும் காவல்துறை தெரிவிக்கின்றனர். திருச்சி விமான நிலையத்தில் விஜயை பார்க்கமுடியவில்லை என்றால் மொத்த மக்கள் கூட்டமும் பிரச்சாரம் நடக்கும் இடத்திற்கு வந்துவிடுவார்கள். அப்படி வரும்போதுதான் கூட்டநெரிசல் ஏற்படுகிறது. இதைத்தான் சிபிஐ விசாரணையில் எங்கள் தரப்பில் இருந்து கூறப்பட்டது. பாண்டிச்சேரியில் குறுகிய சாலைகள் இருந்தும் கூட எங்களுடைய பிரச்சாரத்தை அமைதியான முறையில் முடித்துவிட்டு வந்தோம்.

ஆனால், தமிழகத்தில் இருக்கக்கூடிய, காவல்துறையினர் பலரும் இன்னும் ஸ்டாலினுடைய பேச்சை கேட்டுக்கொண்டு, அவர் (ஸ்டாலின்) மீண்டும் ஆட்சிக்கு வருவாரென்ற நம்பிக்கையில், அவ்வாறு அவர் வரும் பட்சத்தில் நமக்கு பதவி உயர்வு கிடைக்கும் என்று சில காவல் துறையினர், தங்களுடைய ஜனநாயக கடமையில் இருந்து விலகி, தங்களுடைய நடுநிலை தன்மையில் இருந்து விலகி, எங்களுடைய தலைவரின் பிரச்சாரத்தை முடக்கவே தமிழக காவல் துறையினர் எந்த இடத்திலும் அனுமதி அளிக்கவில்லை. இதனால் அளவிற்கு அதிகமான மக்கள் கூடும்போது மீண்டும் கரூர் சம்பவம் போல நடக்கும் என்று மு.க. ஸ்டாலின் நினைக்கிறார். அதைவைத்து அவர் அரசியல் செய்ய நினைக்கிறார். கொளத்தூரில் இதுபோன்ற சம்பவம் நடந்திருந்தால் அடுத்த 20 நாட்களுக்கு எங்கள் தலைவரின் பிரச்சாரத்தை முடக்கி இருப்பார்கள் இதுதான் இவர்களின் சதியே" என்று ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். நேற்று, வில்லிவாக்கத்தில் ஜனநாயகபூர்வ முறையில் நாங்கள் வேட்பாளர் நிகழ்ச்சி நடத்தினோம். அப்போது அருகில் இருந்த 'மேன்சன்' ஒன்றில் இருந்த இருவர் கண்ணாடிப் பாட்டில்களை வீசினர். அதில் ஒரு பெண்ணினுடைய முட்டியில் கண்ணாடிப் பாட்டில் பட்டு மயக்கமடைந்து தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் தற்போது சமூகவலைத்தளத்தில் கூறுவது போன்று அது இருவருக்குள் நடந்த சண்டை இல்லை என்றும், அந்த அறையில் சோதனையிட்டதில் பல கண்ணாடிபாட்டில்கள் உடைக்கப்பட்டு இருந்தன என்றும் அவர் கூறினார். தற்போது அந்த சிசிடிவி காட்சியினை தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளதாகவும், மேலும் இது இயற்கையாக நடந்தது போன்று திமுக சித்தரிக்கிறது என்றும் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டினார். தற்போது நாங்கள் தலைமை தேர்தல் அதிகாரியைதான் நாங்கள் நம்புகிறோம், காவல்துறையை நாங்கள் நம்பவில்லை. தற்போது அந்த 2 நபர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய சொல்லியிருக்கிறோம் என்று அவர் கூறினார்.

இதன்மூலம் பெண்களை கூட்டங்களுக்கு வருவதை தடுக்கிறார்கள். பெண்கள்தான் தவெகவினை முன்னெடுத்து செல்கின்றார்கள். அதை தடுக்கவே திமுக அதிகாரிகள் இதுபோன்ற விஷயங்களை செய்துகொண்டிருக்கிறார்கள். மாநகர காவல் அதிகாரியாக இருக்கட்டும், பழைய அதிகாரிகளாக இருக்கட்டும் அனைவரையும் மாற்ற வேண்டும் என்று நாங்கள் கூறியிருக்கின்றோம். இதுபோன்ற கோரிக்கைகளைத்தான் நாங்கள் கொடுத்துள்ளோம். மேலும் தவெக தலைவர் விஜய், நான்கு நாட்களுக்கு முன்பு கூட இந்த கோரிக்கைகளை வலியுறுத்திய புகார் மனுவைதான் அளித்தார் என்றும் ஆதவ் அர்ஜுனா கூறினார். இதனையடுத்து, தவெக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் மக்களை சந்திக்க இருக்கிறார். அதற்காக தவெக தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும், மக்கள் பாதுகாப்பிற்கும் காவல்துறைதான் பொறுப்பு என்றும், அந்த நம்பிக்கையில் நாளைய பிரச்சாரத்தை தொடங்குவதாக ஆதவ் அர்ஜுனா பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.