தமிழ்நாடு

கைகும்பிட்டு வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்ட இராணுவ வீரர்...!

Tamil Selvi Selvakumar

தனது மனைவியைத் தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காஷ்மீரில் ஹவில்தாராக பணியாற்றி வரும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் படவேடு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் காஷ்மீரில் ஹவில்தாராக பணியாற்றி வருகிறார்.  இராணுவ வீரரான இவர், தனது மனைவி தாக்கப்பட்டதுக்கு நடவடிக்கை எடுக்கக்கோரி கைகும்பிட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், திருவண்ணாமலையில் படவேடு ரேணுகாம்பாள் கோயில் அருகில் தனது மனைவி மளிகை கடை நடத்தி வந்ததாகவும், இந்த கடையை காலி செய்யுமாறு அங்கு சென்ற ஒரு கும்பல் கடையை அடித்து நொறுக்கியதோடு, தனது மனைவியைத் தாக்கியதாகவும் கூறியவர், தாக்குதல் நடத்தியவர்கள் மீது  நடவடிக்கை எடுத்து தனது குடும்பத்தை காப்பாற்றுமாறு காணொளி வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து விளக்கமளித்துள்ள திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ராணுவ வீரர் பிரபாகரனின் மனைவியின் சகோதரர் கடை  உரிமையாளரை தாக்கினார். இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் கடையிலிருந்து பொருட்களை எடுத்து வீசியதாக தெரிவித்தார். இதுதொடர்பாக இரு தரப்பினரும் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.