தமிழ்நாடு

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கைது செய்யப்படும்: டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை...

தமிழக கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட தடை விதித்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

தமிழகத்தில் ஒமிக்ரான் பரவலை தடுக்க தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், புத்தாண்டு அன்று மக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள கடற்கரைகளில் டிசம்பர் 31-ஆம் தேதி இரவு பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட தடை விதிப்பதாகவும், 

புத்தாண்டில் தமிழ்நாடு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் பொது இடங்களில் அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டிசம்பர் 31-ஆம் தேதியன்று மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது என்று குறிப்பிட்டுள்ள அவர், மீறினால் ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.புத்தாண்டு அன்று மக்கள் அவசர உதவி தேவைப்பட்டால் 100, 112 எண்களை தொடர்பு கொள்ளுமாறும், KAVALAN - SOS செயலியை பயன்படுத்தமாறும் டிஜிபி சைலேந்திரபாபு வலியுறுத்தியுள்ளார்.

அனைவரும் வீடுகளிலேயே அவரவர் குடும்பத்தினருடன் புத்தாண்டினை மகிழ்ச்சியுடனும், மற்றவர்களுக்கு இடையூறு இல்லாத வகையிலும் கொண்டாடுமாறு அறிவுறுத்திய அவர் வழிபாட்டு தலங்களில் தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்ட கொரோனா விதிமுறைகளை பின்பற்றுமாறும், புத்தாண்டு தினத்தில் பொது இடங்களில் மக்கள் வாகனங்களுடன் கூட்டமாக கூடுவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் இருசக்கர வாகனத்தில் இரவு நேரங்களில் பயணம் செய்வதை தவிர்த்து, பொது போக்குவரத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.