தமிழ்நாடு

தீவிரமடைந்தது அசானி புயல்.. தமிழகத்தில் 15 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை!

வங்கக்கடலில் உருவான அசானி புயல் தீவிரமடைந்துள்ளதால், தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Suaif Arsath

தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்று, வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் தீவிரமடைந்துள்ளது.

நாளை மாலை, புயல் வடக்கு ஆந்திரா-ஒடிசா கடற்கரையையொட்டிய மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதியில் நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பின்னர் வடக்கு-வடகிழக்கு திசையில் ஒடிசா கடற்கரையையொட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதியை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 15 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தீவிர புயல் காரணமாக, மத்திய வங்க கடல் பகுதியில் இன்று மணிக்கு 105 முதல் 125 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் 95 முதல்  115 கிலோ மீட்டர் வேகத்திலும்  சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்
கூறப்பட்டுள்ளது.

எனவே மீனவர்கள் யாரும் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனிடையே அசானி புயலால் ஒடிசாவில் அதிகன மழை இருக்கும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.