தமிழ்நாடு

பள்ளி மாணவியை கடத்திய அசாம் இளைஞர்..! மடக்கி பிடித்த போலீசார்..!

Malaimurasu Seithigal TV

அசாமை சேர்ந்த இளைஞர் ஒருவர், 14 வயது பள்ளி மாணவியை கடத்தி வந்து ஓசூரில் குடும்பம் நடத்தி வந்த நிலையில் இன்று அசாம் போலீசார் அந்த வாலிபரை கைது செய்து பள்ளி மாணவியை மீட்டனர்.

அசாம் மாநிலம் காம்ருப் மாவட்டம் பகுருதியா பகுதியை சேர்ந்த அப்துல் வாகா (23) என்ற வாலிபர், அதே பகுதியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படித்து வந்த 14 வயது பள்ளி மாணவியை கடத்தியுள்ளார். பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓசூருக்கு கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும், இருவரும் திருமணம் செய்து கொண்டு ஓசூர் சிப்காட் பகுதியில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். அப்துல் வாகா ஓசூரில் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

பள்ளி மாணவி கடத்தல் குறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் அசாம் மாநிலம் நாகர் பெரா காவல் நிலைய போலீசார், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்துல் வாகாவின் செல்போன் எண்ணை கொண்டு அவர் ஓசூர் பகுதியில் இருப்பதை அசாம் போலீசார் கண்டறிந்தனர். அதனை தொடர்ந்து காவல் உதவியாளர் சிசிர் குமார் பாசுபதி தலைமையிலான அசாம் போலீசார், ஓசூருக்கு வந்து சிப்காட் பகுதியில் தங்கியிருந்த இருவரையும் பிடித்தனர்.

பின்னர் போலீசார் பள்ளி மாணவியை மீட்டு அவரை கடத்தி வந்த குற்றத்திற்காக வாலிபர் அப்துல் வாகாவை கைது செய்தனர். 
அதனைத்தொடர்ந்து, இருவருக்கும் ஓசூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி அசாம் மாநிலத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.