தமிழ்நாடு

பப்ஜி மதனின் ஜாமீன் மனு தள்ளுபடி,.! சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! 

Malaimurasu Seithigal TV

யூடியூபர் பப்ஜி மதனின் மனைவி கிருத்திக்காவுக்கு ஜாமீன் வழங்கிய  சைதாப்பேட்டை நீதிமன்றம், பப்ஜி மதனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. 

பப்ஜி விளையாட்டில் ஆபாசமாக பேசி யூடியூபில் நேரலை ஒளிபரப்பு செய்து வந்தவர் மதன். தொடர்ந்து  பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்து தகாத வார்த்தையால் பேசி பதிவிட்டு வந்த மதன் மீது சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் கிளம்பியது. குறிப்பாக மதன் மீது  நடவடிக்கை எடுக்கக்கோரி  புளியந்தோப்பு சைபர் கிரைம் பிரிவு போலீஸாரிடம் இரண்டு புகார்கள் வந்தது.

அதைத் தொடர்ந்து பப்ஜி மதன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைமிலும் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் மதனை தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் மதன் தலைமறைவானதால் மதனின் மனைவி கிருத்திகாவை போலீசார் கைது செய்தனர். 

மதன் நடத்தும் யூட்யூப் சேனலின் நிர்வாகி கிருத்திகா என்பதால் அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அதன்பின்னர் தலைமறைவாக இருந்த மதனும் கைதுசெய்யப்பட்டார். இந்நிலையில் மதனின் மனைவி கிருத்திக்காவுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது சைதாப்பேட்டை நீதிமன்றம்.  ஆனால், அதே நீதிமன்றத்தில் பப்ஜி மதன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.