தமிழ்நாடு

பருப்பு, பாமாயில் கொள்முதல் டெண்டருக்கு தடை: தமிழக அரசு மேல் முறையீடு

Malaimurasu Seithigal TV

பருப்பு மற்றும் பாமாயில் கொள்முதல் டெண்டருக்கு உயர் நீதிமன்ற கிளை தடைவிதித்துள்ள நிலையில், அதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது.

2021 பிப்ரவரி 25ஆம் தேதி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் இயக்குநர் குழு சார்பாக கூட்டம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் கலந்து கொள்வதற்கு முந்தைய நிபந்தனைகள் கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் 2021 ஏப்ரல் 26-ஆம் தேதி 20,000 மெட்ரிக் டன் பருப்பு கொள்முதலுக்கான ஏல அறிவிப்பையும், 2021 மே 5ஆம் தேதி 80 லட்சம் லிட்டர் பாமாயிலுக்கான டெண்டர் அறிவிப்பும் தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.

இதில் முந்தைய நிபந்தனைகள் பின்பற்றப்படாமல், புதிய நிபந்தனைகள் கடைபிடிக்கப்பட்டது. இதனை எதிர்த்து கரூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.இதனை விசாரித்த நீதிபதி வேலுமணி, அரசு தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும், அதுவரை தமிழக அரசின் பருப்பு மற்றும் பாமாயிலுக்கான டெண்டருக்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டார்.

இதுகுறித்த மேல்முறையீட்டை அதே நீதிமன்றத்தில்தான் தொடரவேண்டும் என்றிருந்தாலும், தடைவிதித்த நீதிபதி தலைமையிலேயே இரு நீதிபதி அமர்வு இருப்பதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் சரவணன் ஆகியோர் அமர்வில் தமிழக அரசு அவசர மேல்முறையீடு செய்துள்ளது.