தமிழ்நாடு

பேனர் விவகாரம்...ஈபிஎஸ்க்கு பதிலடி...அமைச்சர் வெளியிட்ட பகீர் தகவல்!

Tamil Selvi Selvakumar

நம்ம ஊரு சூப்பரு திட்டத்திற்காக ஒரு பேனர் அச்சடிக்கப்பட்டதற்கான செலவு குறித்து ஈபிஎஸ் கூறியது உண்மைக்கு புறம்பான தகவல் என்று அமைச்சர் பெரியகருப்பன் திட்டவட்டமாக கூறியுள்ளார். 

அரசு மீது குற்றம் சாட்டிய ஈபிஎஸ்:

”நம்ம ஊரு சூப்பரு” திட்டத்தின் ஒரு பேனர் அச்சடிக்கும் விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதாக தமிழக அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருந்தார். ஏற்கனவே, இந்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள் என்று கூறியிருந்தார்.

உண்மைக்கு புறம்பான கருத்து கூறும் ஈபிஎஸ்: 

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அரசின் மீது முதலமைச்சராக இருந்தவர், தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர் உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை கூறியுள்ளார்.   ஒரு பேனருக்கு ரூ.7,906 செலவு என கூறுவது முற்றிலும் தவறு. ஒரு பேனருக்கு ரூ.611 மட்டுமே செலவு செய்யப்பட்டது. விளம்பர பேனர் அச்சிடும் பணிகளில் எந்த ஒரு தனியார் நிறுவனமும் ஈடுபடுத்தப்படவில்லை” என்று கூறிய அவர், விளம்பர பதாகைகள் அச்சடிக்கும் பணிகள் 9 மாவட்டங்களில் நடந்ததாகவும், ஈபிஎஸ் கூறியது போல ஒரேயொரு  நிறுவனத்திற்கு தரப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

கரும்புள்ளி குத்துவது:

தொடர்ந்து பேசிய அவர், பேனர் விவகாரத்தில் குறை கூறுவது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மீது கரும்புள்ளி குத்துவது போன்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

தங்கள் தவறுகளை மறைக்க பழி போடும் ஈபிஎஸ்:

அதிமுக ஆட்சி காலத்தில் தான் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் வளர்ச்சிக்கு கேடு விளைந்ததாகவும் பெரியகருப்பன் குற்றஞ்சாட்டினார். அதுமட்டுமல்லாது, அதிமுக ஆட்சியில் 2 ஆயிரத்து 800 ரூபாய் பேனருக்கு 28 ஆயிரம் ரூபாயும், 500 ரூபாய் எல்.இ.டி பல்புக்கு 5 ஆயிரம் ரூபாயும் பில் போடப்பட்டு மோசடிகள் நடந்ததாக அவர் பகீர் தகவல்களை வெளியிட்டார்.  அதிமுக  தங்கள் தவறுகளை மறைக்கவே திமுக மீது பழி சுமத்துவதாகவும் பெரியகருப்பன் பதிலளித்துள்ளார்.