தமிழ்நாடு

கரையை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்... மணிக்கு 60  கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று...

வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த நிலையில், சென்னையில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது.

Malaimurasu Seithigal TV

வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, தமிழகத்தில் தற்போது தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக அந்தமான் அருகே உருவான காற்றழுத்தம் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடலோரப் பகுதிக்கு நேற்று நெருங்கி வந்தது. அதன் காரணமாக, நேற்று முன்தினம்  இரவு முதல் வட தமிழகத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. 

அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கடலூர், சேலம் மாவட்டங்களில் நேற்று காலையில் இருந்தே பலத்த மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக  காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்துக்கு இடையே மேற்கு நோக்கி நகரத் தொடங்கியது. பின்னர் இரவில் வேகம் குறைந்து, தமிழக பகுதி நோக்கி நகர்ந்து வந்தது. 

இந்த நிலையில், வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை மற்றும் புதுவை இடையே அதிகாலை கரையைக் கடந்தது. இதனால் சென்னையில் அதிகாலை முதல் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. 

தென்மேற்கு  வங்கக் கடல்,  தமிழ்நாடு மற்றும் ஆந்திரா கடலோரப் பகுதிகளில் மணிக்கு 60  கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் யாரும் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.