தமிழ்நாடு

முதலமைச்சரிடம் மனு அளிக்க குவிந்த பொதுமக்கள்...அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட மு.க.ஸ்டாலின்!

Tamil Selvi Selvakumar

பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை காகிதங்களாக பார்க்காமல் அவர்களின் வாழ்வாதாரமாக பார்க்கவேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சிறப்பு திட்டங்கள் செயலாக்கம் மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர், கிராமப்புற மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும் என வலியுறுத்தினார். மக்களாட்சி தத்துவத்தில் நம்பிக்கை கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, மக்களின் குறைகளை தீர்ப்பதற்கும் முக்கியத்துவம் அளிப்பதை உணர்ந்து, அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று கூறினார்.

மாவட்ட அளவில் அரசின் முகமாக பணியாற்றும் அதிகாரிகள், கடினமாக உழைத்தால் பொதுமக்கள் பயனடைவார்கள் என்று கூறினார். மக்கள் நலன் கருதி அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது அதிகாரிகளின் கடமை என்றும் முதலமைச்சர் கூறினார்.

ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்றிருந்த நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் மனு அளிக்க குவிந்ததால் பரபரப்பு நிலவியது. அதனை தொடர்ந்து காரில் இருந்த படி மனுவை பெற்றுக்கொண்ட முதலமைச்சர், பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை காகிதங்களாக பார்க்காமல் அவர்களின் வாழ்வாதாரமாக பார்த்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.