தமிழ்நாடு

"தைரியமாக இருங்க"... உக்ரைனில் தவிக்கும் தமிழக மாணவர்களுக்கு காணொளி மூலம் நம்பிக்கை கொடுத்த முதல்வர் ஸ்டாலின்

உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களுடன் காணொளி வாயிலாக தொடர்பு கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தற்போதைய நிலவரங்களை கேட்டறிந்தார்.

Malaimurasu Seithigal TV

மாணவர்களுடன் முதல்வர் உரையாடியதாக அரசு வெளியிட்ட அறிக்கையில்,

உக்ரைனில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, அங்குள்ள தமிழக மாணவர்களை விரைந்து மீட்க  மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் கடிதம் எழுதியதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே மாணவர்களின் பெற்றோரின் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கான பயண கட்டண செலவை தமிழக அரசு ஏற்க முன்வந்ததாகவும், அதுமட்டுமல்லாது மாணவர்களும், பெற்றோர்களும் தொடர்பு கொள்ளும் வகையில் மாநில கட்டுப்பாட்டு அறையில் தனி குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தநிலையில்,  உக்ரைனில் தவிக்கும் தமிழக மாணவர்கள் மௌனி சுஜிதா, ஆன்டனி, நவநீத ஸ்ரீராம் ஆகியோரை எழிலகத்திலிருந்து காணொளி வாயிலாக  முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்பு கொண்டு பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது மாணவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், அங்கு பாதுகாப்பாகவும், தைரியமாகவும் இருக்க முதல்வர் அறிவுறுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.