தமிழ்நாடு

”உரிமைத் தொகையில் பயன்பெறும் வசதியானவர்கள் தாமாக விலக வேண்டும்” - கீதா ஜீவன்!

Tamil Selvi Selvakumar

வசதி படைத்தவர்கள் மகளிர் உரிமைத் தொகை பெற்றால் அவர்களாகவே முன்வந்து விலகிக் கொள்ள வேண்டும் என்று சமூக நலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் அறிவுறுத்தியுள்ளார். 

சென்னை பிராட்வேவில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அமைச்சர்கள் கீதா ஜீவன், சேகர்பாபு ஆகியோர் சாலையோர வாழ் மக்கள் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், பெண்கள் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்வதற்கு பணிகள் மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதேசமயம், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் வசதி படைத்தவர்கள் பயன்பெற்று இருந்தால் அவர்களே தானாக அதிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என கூறினார்.

தொடர்ந்து பேசியவர், கடந்த ஆட்சியில்  ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை நாங்கள் ஆட்சிக்கு வந்து தான் மகளிருக்கு என்று ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம். எனவே, உரிமைத் தொகையை உயர்த்துவது குறித்து இப்போது கூற முடியாது என்றும், மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பப் பணிகள் முடிந்த பின் குடும்ப அட்டையில் பெயர் சேர்ப்பு, நீக்கம் செய்யும் பணிகள் தொடங்கும் என்றும் அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.