திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சைக்கிளில் சாலையை கடக்க முயன்றவர் மீது இருசக்கர வாகனம் ஒன்று பலமாக மோதும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
பல்லடம் அடுத்த மாதப்பூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. பஞ்சாயத்து நிர்வாகத்தில் குடிநீர் விநியோகிக்கும் வேலை செய்து வரும் இவர், நேற்று வழக்கம்போல் பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், கள்ளக்கிணறு அருகே சாலையை கடக்க முயன்ற போது தாராபுரத்தில் இருந்து பல்லடம் நோக்கி மின்னல் வேகத்தில் வந்த இருசக்கர வாகனம் ஒன்று அவர் மீது பலமாக மோதி சென்றது.
இதில் படுகாயமடைந்த சுப்பிரமணி மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சியை கைப்பற்றி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.