தமிழ்நாடு

"பட்டியலின மக்களுக்கு அரசியல் அதிகாரம் கொடுத்தது பாஜக" - அண்ணாமலை

Malaimurasu Seithigal TV

தமிழ்நாட்டில் கஞ்சா மற்றும் கள்ளச்சாராயத்தால் இளைஞர்கள் சீரழிந்து வருவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை 28-வது நாளாக என் மண், என் மக்கள் என்ற பெயரில் நடைபயணத்தை தொண்டர்களுடன் மேற்கொண்டார்.

பின்னர் பேசிய அவர், தமிழ்நாட்டில் வீதியெங்கும் கஞ்சா விற்பனை மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், அதை தடுப்பதற்கு திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சாடினார்.

தொடர்ந்து பேசிய அவர், கம்பம் நகரில் அதிக அளவில் திமுகவினரால் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகவும், மது விற்பனை, பெண் வன்கொடுமை, சாதி ஏற்றத்தாழ்வுகளை கவனிக்காமல் திமுக அரசு செயல்பட்டு வருவதாககவும் குற்றம்சாட்டினார்.

சனாதனத்தை ஒழிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முற்பட்டு வருகிறார் எனவும், அட்டவணை பிரிவு மக்களுக்கு அரசியல் அதிகாரம் கொடுத்தது பாஜக என்றும் தெரிவித்தார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில், அட்டவணைப் பிரிவை சேர்ந்த சகோதர, சகோதரிகள் 20 பேர் அமைச்சர்களாக இருக்கிறார்கள் எனவும் அண்ணாமலை மேற்கோள்காட்டினார்.