பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நின்று போராட்டங்கள் நடத்துகின்றனர். அதன் தொடக்கமாக தமிழகத்தின் தலைநகர் சென்னையில் விருகம்பாக்கம் பகுதியில் சைக்கிள் பேரணியை தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை தொடங்கி வைத்தார். இந்தப் போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் சைக்கிளில் கலந்து கொண்டனர்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் கண்டன போராட்டங்கள் பேரணிகள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்படுகிறது. மோடி அரசு உடனடியாக இந்த விலைவாசி உயர்வை திரும்ப பெற வேண்டும்.
இந்த அரசு அம்பானி அதானி ஆகிய இருவருக்கு மட்டுமே செயல்படுகிறது. நீண்டகாலம் மக்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள். கிளர்ச்சி ஏற்பட்டு இந்த ஆட்சி அகற்றப்படும் என்றார். மேலும் அதிமுக பாஜக கூட்டணி இயற்கையானது அல்ல அது ஒரு செயற்கை கூட்டணி அது நிலைப்பதற்கு வாய்ப்பில்லை என்று தெரிவித்தார். மேலும் முருகனை வைத்து இந்த மக்களை அவர்களின் வாக்குகளை பெற்று விடலாம் என பாரதிய ஜனதா கட்சி நினைக்கிறது பிள்ளையாரை வைத்தாலும் அது தமிழகத்தில் நடக்காது என்று தெரிவித்தார்.