தமிழ்நாடு

கஜா புயலால் சேதமடைந்த கட்டிடங்கள்... புதிய குடியிருப்புகள் கட்டப்படும்!!

Malaimurasu Seithigal TV

இயற்கை சீற்றங்களால் சேதமடைந்துள்ள குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, கூடுதல் குடியிருப்புகள் கட்டி தரப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டிற்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது.  அதனை தொடர்ந்து ஆளுநர் உரையின் மீதான தீர்மானம் காரணமாக சட்டமன்றமானது தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி  வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.  தொடர்ந்து சட்டப்பேரவையில் அமைச்சர்கள் திட்டங்கள் அதன் மீதான விவாதங்கள் கேள்விக்கு பதில்கள் போன்றவை நடைபெற்று வருகின்றன.

இன்றைய சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்து ராசா, புதுக்கோட்டை தொகுதி சத்தியமூர்த்தி நகரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் கஜா புயலால் சேதமடைந்து முற்றிலும் செயல்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும், கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடத்தை கட்டி தர வேண்டும் என்றும் பூங்கா நகரில் காலியாக இருக்கும் வீட்டு வசதி வாரிய நிலத்தில் புதிய குடியிருப்புகளை கட்டித் தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, தமிழ்நாட்டில் இயற்கை சீற்றங்கள் காரணமாக 130 இடங்களில் இது போன்ற பழைய கட்டடங்கள் உள்ளதாகவும், அதில் 61 கட்டிடங்கள் மிக மோசமாக இருக்கும் காரணத்தினால் அதை இடிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது என்றும், இடிக்கப்படும் இடங்களில் புதிய குடியிருப்புகள்  தற்போது இருக்கும் எண்ணிக்கையை விட கூடுதலாக கட்டி தரப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.