தமிழ்நாடு

செந்தில் பாலாஜி போன்ற கைதி அமைச்சராக இருக்கலாமா? முதலமைச்சருக்கு எடப்பாடி சரமாரி கேள்வி!

Tamil Selvi Selvakumar

ஊழல் புரிந்தவர்கள் அமைச்சரவையில் இருந்து விலக்கப்படுவதே தார்மீக நீதி என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிமுக கொடிகளை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்து உரையாற்றினார். இந்த நிகழ்வுகளில் முன்னாள் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பலர் திரளாக பங்கேற்றனர். அதன்படி, ஆவடத்தூர் பகுதியில் கொடியேற்றி வைத்தபின் எடப்பாடி பழனிசாமி உரையாற்றியபோது, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள கைதி அமைச்சராக இருக்கலாமா? என்று கேள்வி எழுப்பினார். அது தமிழ்நாட்டிற்கே தலைகுனிவு என்று தெரிவித்த அவர், ஊழல் புரிந்தவர்கள் அமைச்சரவையில் இருந்து விலக்கப்பட வேண்டும் என்பதே தார்மீக நீதி என்றும், ஆனால் முதலமைச்சர் அதைப் பொருட்படுத்துவதில்லை எனவும் தெரிவித்தார். 

அதேபோல் நங்கவள்ளிக்குட்பட்ட கரிக்கப்பட்டி பகுதியில் கொடியேற்றி உரையாற்றியபோது, ஜல்லிக்கட்டுக் காளை வெளியே வரும்போது வர்ணனையாளார்கள் பேசுவதுபோல் திமுகவை தொட்டுப்பார், சீண்டிப்பார் என்று முதலமைச்சர் பேசுவதாக விமர்சித்தார். மேலும், ரவுடிக்கும் முதலமைச்சருக்கும் வித்தியாசம் இல்லாத வகையில் பேசலாமா? என்றும் கேள்வி எழுப்பினார். 

தொடர்ந்து தோரமங்கலம் பகுதியில் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றி வைத்து உரையாற்றினார். அப்போது, அதிமுக ஆட்சியின்மீது ஊழல் குற்றச்சாட்டு கூறும் முதலமைச்சர் ஸ்டாலின், அது குறித்து தன்னோடு நேரில் விவாதிக்க தயாரா? என்று சவால் விடுத்தார். மேலும் திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிப்பது பொய் என்றும், ஊழலில்தான் வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.