காவிரி ஆற்றில் நீர் திறக்கும் விவகாரம் தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசியலில் மீண்டும் புயலைக் கிளப்பியுள்ளது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு (CWRC) ஆகியவற்றின் அறிவுறுத்தலின் அடிப்படையில் வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க கர்நாடக அரசு தவறியுள்ளது.
இந்த நிலையில், முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தலின் அடிப்படையில் கர்நாடக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது.
கடந்த ஜூலை 28-ம் தேதி நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவின் (CWRC) 139-வது கூட்டத்தில், "காவிரி பாசனப் பகுதிகளில் நிலவும் மழை மற்றும் நீர் இருப்பைக் கணக்கில் கொண்டு, ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 12 வரை தினமும் வினாடிக்கு 3,500 கன அடி வீதம் பிலிகுண்டுலுவில் தண்ணீரைத் திறக்க வேண்டும்" என கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டது.
இதை ஜூலை 30-ம் தேதி நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் (CWMA) அவசரக் கூட்டமும் உறுதிசெய்தது.
ஆனால், பிலிகுண்டுலுவில் இருந்து ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 2 வரை வினாடிக்கு 158 முதல் 550 கன அடி அளவில்தான் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவின் (CWRC) உத்தரவுகளை கர்நாடக அரசு அப்பட்டமாக அலட்சியப்படுத்தியுள்ளது.
மறுபுறம், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுப்பதற்கு நீர் இருப்பைக் காரணம் காட்ட முடியாத வகையில் கர்நாடக அணைகளில் நீர் நிரம்பி வழிகிறது. ஆகஸ்ட் 3 நிலவரப்படி, கிருஷ்ணராஜ சாகர் (KRS) அணையில் 23.078 டி.எம்.சி., கபினி அணையில் 18.610 டி.எம்.சி., ஹேமாவதி அணையில் 28.022 டி.எம்.சி., ஹாரங்கி அணையில் 7.827 டி.எம்.சி. என மொத்தம் 77.537 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. இதில் பயன்படுத்தக்கூடிய நீரின் அளவு 67.517 டி.எம்.சி.
கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைப் பகுதிகளில் பெய்த கனமழையால் நீர்வரத்து தாறுமாறாக அதிகரித்துள்ளது. விகிதாச்சாரப் பகிர்வு விதிகளின்படி பார்த்தால், இந்தக் காலத்தில் தமிழகத்துக்கு 26.954 டி.எம்.சி. தண்ணீர் வந்திருக்க வேண்டும். ஆனால், ஆணையம் உத்தரவிட்ட குறைந்தபட்ச அளவான 4.536 டி.எம்.சி. நீரைக்கூட கர்நாடகா திறந்துவிடவில்லை.
அணைகளில் போதுமான நீர் இருந்தும், கர்நாடகா வேண்டுமென்றே தண்ணீரைத் தர மறுப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள தமிழக அரசு, சட்ட வல்லுநர்களின் ஆலோசனையின்பேரில் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.
"காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடகா உடனடியாக மதிக்க வேண்டும். தமிழகத்துக்கான உரிய காவிரி நீரை, உரிய காலக்கெடுவுக்குள் திறந்துவிட உத்தரவிட வேண்டும்" என்பதே தமிழக அரசின் முதன்மை கோரிக்கையாகும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.