தமிழ்நாடு

டெல்டா வந்தடைந்த காவிரி நீர்: வரவேற்பும் போராட்டமும்!

Malaimurasu Seithigal TV

திருச்சி முக்கொம்புவிற்கு  வந்தடைந்த காவேரி நீரை விவசாயிகள் மலர், நெல் விதைகளை தூவி வரவேற்றனர். 

குறுவை சாகுபடி பாசனத்திற்காக  மேட்டூர் அணையிலிருந்து இருந்து ஜூன் 12 ஆம் தேதி காவேரி நீர் திறக்கப்பட்டது. அந்த நீரானது கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணையை கடந்து திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலனைக்கு வந்தடைந்தது. தற்போது, முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து 1900 கன அடியாக உள்ளது. அந்த நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில் முக்கொம்பு வந்தடைந்த நீரை பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் மலர் தூவியும் நெல் விதைகளை தூவியும் வரவேற்றனர். மேலும் காவிரியை வாழ்த்தும் விதமாக வாழ்த்து முழக்கங்களையும் எழுப்பினர். முன்னதாக காவிரி தாய் சிலை, முக்கொம்பு அணையை கட்டிய ஆர்தர் காட்டன் சிலை ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

மேலும் தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் நாளை தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில், அவசரம் அவசரமாக தேங்கியுள்ள மழை நீரில் கான்கிரீட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள் கல்லணை கால்வாயில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பாசன வாய்க்கால்கள் இன்னும் முறையாக தூர்வாரப்படவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர். திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியம் பள்ளிவர்த்தி, குருவாடி , காரியமங்கலம் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாய்க்கால் முறையாக தூர்வாரப்படவில்லை என்று விவசாயிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர். மேலும், அரசு உடனடியாக பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.