தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு குறித்து ஆலோசிக்க, கர்நாடகாவில் நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக முதலமைச்சரும் நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார், கர்நாடகத்தின் நலனைப் பாதுகாப்பதுடன், காவிரி விவகாரத்தில் மேகதாது அணை கட்டும் திட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை எனத் தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை ஆணையம், தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 3,500 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு கர்நாடக விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், கர்நாடக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டியது. பெங்களூருவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் சித்தராமையா, எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர்கள் ஷோபா கரந்த்லாஜே, குமாரசாமி, சோமண்ணா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய முதல்வர் டி.கே.சிவக்குமார், காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு முன்னாள் முதலமைச்சர்கள் பலரும் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார். அதேபோல், தற்போதைய அரசும் கர்நாடக மக்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருந்தபோதிலும், நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டதாக அவர் கூறினார். தற்போது கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாகவும், கபினி அணை நிரம்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், காவிரி நீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண மேகதாது அணை கட்டுவது அவசியம் எனக் கூறிய முதல்வர் டி.கே.சிவக்குமார், மேகதாது அணையால் கர்நாடகா மட்டுமின்றி தமிழகத்துக்கும் பயன் கிடைக்கும் எனத் தெரிவித்தார். எனவே, எந்தச் சூழ்நிலையிலும் மேகதாது அணை கட்டும் திட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும், “மேகதாது அணையை கட்டியே தீருவோம்” என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய், காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், அவரது பயணம் குறித்தும் டி.கே.சிவக்குமார் விளக்கம் அளித்தார். விஜய் மீது தனக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகக் கூறிய அவர், அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தற்போதைய சூழலில் விஜய் கர்நாடகாவுக்கு வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்தார்.
கர்நாடகாவில் தற்போது நிலவும் சூழலில் தேவையற்ற பதற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க, இருவரும் மற்றொரு நல்ல சூழலில் சந்திக்கலாம் என விஜய்யிடம் தெரிவித்ததாகவும், அதற்கு விஜய் ஒப்புக்கொண்டதாகவும் டி.கே.சிவக்குமார் கூறினார். மேலும், இரு மாநில மக்களும் ஒருவரையொருவர் மதித்து ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதே முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.