தமிழ்நாடு

"மத்திய ஆட்சியாளர்களால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஆபத்து" - மு.க.ஸ்டாலின்!

Malaimurasu Seithigal TV

அரசியல் மாண்புகளையோ, மாநில உரிமைகளையோ மதிக்காத மத்திய ஆட்சியாளர்களால், இந்திய அரசியலமைப்புச் சட்டமே ஆபத்துக்குள்ளாகி இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இளைஞரணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய மடலில், குமரி முனையிலிருந்து தொடங்கிய திமுக இளைஞரணியின் இருசக்கர வாகனப் பேரணி குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்காத நியமனப் பதவிக்காரர்களின் அடாவடிகள் கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். மதவாத – மொழி ஆதிக்க - மானுட விரோத அரசியல் ஒவ்வொரு மாநில மக்களையும் நடுங்கச் செய்வதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இவை எல்லாவற்றுக்கும் எதிரான நல்ல தீர்ப்பை 2024-ஆம் ஆண்டில் மக்கள் எழுதப் போகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

அதற்கான விழிப்புணர்வுப் பரப்புரையாகத்தான் இளைஞரணி இருசக்கர வாகனப் பேரணியை மேற்கொண்டிருப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளார். மாநில உரிமைகள் பறிக்கப்படுவதால் நீட் தேர்வு போன்ற கொடூரங்கள் எத்தனை உயிர்களைப் பறித்துள்ளன என்பதை திமுக இளைஞரணி மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.