தமிழ்நாடு

மத்தியக் குழுவினர் முதலமைச்சர் ஸ்டாலினோடு ஆலோசனை..!

மத்திய அரசிடம் ரூ.2,629கோடி கேட்டு மாநில அரசு கோரிக்கை..!

Malaimurasu Seithigal TV

தமிழகத்தில் வெள்ள சேதம் குறித்து ஆய்வு செய்த மத்தியக் குழுவினர், சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினர். வெள்ள பாதிப்புகளை சீர் செய்வதற்காக தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம், 2 ஆயிரத்து 629 கோடி ரூபாய் நிவாரண நிதி கேட்கப்பட்டது. இதை அடுத்து மழை பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்வதற்காக, மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் கடந்த 22 ஆம் தேதி அன்று சென்னை வந்தனர்.

அந்தக் குழுவினர் இரண்டாகப் பிரிந்து, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, புதுச்சேரி, கன்னியாகுமரி, வேலூர்,ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ள சேதங்களை கணக்கிட்டனர். சேதம் அடைந்த சாலைகள், விளை நிலங்கள் ஆகியவற்றைப் பார்வையிட்டு வெள்ள சேதங்களை அவர்கள் மதிப்பீடு செய்தனர். இரண்டு நாட்களாக அவர்கள் ஆய்வு மேற்கொண்ட நிலையில், இன்று மாலை டெல்லி புறப்பட்டுச் சென்று மத்திய அரசிடம் ஆய்வறிக்கையை சமர்பிக்க உள்ளனர். இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்த மத்தியக் குழுவினர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது தமிழகத்திற்கான நிவாரண நிதியை விரைவில் விடுவிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு அதிகாரிகளிடம் முதலமைச்சர் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.