தமிழ்நாடு

டிச.4ல் கனமழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் எச்சரிக்கை...

மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் வருகிற 4ம் தேதி இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

Malaimurasu Seithigal TV

மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவ உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மதுரை, விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் டிசம்பர் 4ம் தேதி இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
5ம் தேதி, நீலகிரி, கோவை, சேலம், தருமபுரி, ஈரோடு, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில்  கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

டிசம்பர் 6ம் தேதி, நீலகிரி, கோவை, நாமக்கல், திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 6  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.   சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதனைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று மத்திய வங்கக் கடல் பகுதி நோக்கி  நகரக் கூடும் என்பதால், தென்கிழக்கு வங்க கடல் பகுதி, அந்தமான் கடல் பகுதிகள், மத்திய வங்கக் கடல் பகுதி மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே மீனவர்கள் இன்று துவங்கி 4ம் தேதி வரை அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.