தமிழ்நாடு

மாற்றப்பட்ட பிரதமர் மோடியின் சென்னை பயண திட்டம்....!!

Malaimurasu Seithigal TV

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஒட்டி தலைநகர் சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  விமான நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்கள் காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நாளை தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளார்.  முதலில், சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முனையத்தின் கட்டிடத்தை திறந்து வைக்கும் பிரதமர், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 'வந்தே பாரத்' ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். 

இந்த நிலையில் சென்னை விமான நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், பல்லாவரம் கிரிக்கெட் மைதானம் உள்ளிட்ட இடங்கள் காவல் துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.  வாகனங்கள் மற்றும் பயணிகள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.  மேலும், பிரதமர் பயணம் செல்லும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  சென்னையில் மட்டும் 22 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

பிரதமரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சென்னையில் ட்ரோன்கள், பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  தங்கும் விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

ராமகிருஷ்ண மடத்தில் பிரதமர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி, மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இதனையடுத்து, மெரினா கடற்கரைக்கு செல்ல பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.  ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்து, பிரதமர் மோடி ஜனநாயகத்தை சிதைத்து விட்டதாகக் கூறி காங்கிரஸ் கட்சி இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.