தமிழ்நாடு

சொத்து குவிப்பு வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 2 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

Tamil Selvi Selvakumar

சொத்து குவிப்பு வழக்குகளில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் கேபி.அன்பழகன் மீது இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த கே.பி.அன்பழகன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. குறிப்பாக, 2016 முதல் 2021 வரையிலான கால கட்டத்தில் கே.பி.அன்பழகன், வருமானத்துக்கு அதிகமாக 11.32 கோடி வரை சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. அதன்படி, கே.பி.அன்பழகன், அவரது மனைவி மற்றும் மகன்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது தருமபுரி நீதிமன்றத்தில் காலை 10 மணி அளவில் லஞ்ச ஒழிப்புத்துறை 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. 

இதேபோல், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தபோது 36 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்படி, 216 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2021-ஆம் ஆண்டு விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடுகள் உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தியது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்த பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கேபி.அன்பழகன், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.