தமிழ்நாடு

தமிழ்நாட்டில் தேரோட்ட திருவிழாக்கள்.... பல்வேறு இடங்களில் பக்தர்கள் வழிபாடு..!

Malaimurasu Seithigal TV

தமிழ்நாட்டில் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற தேரோட்ட திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.  

அந்தவகையில், மதுரை மாவட்டம் அவனியாபுரம் இமானுவேல் நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மகா காளியம்மன் கோயிலில் 27-வது ஆண்டு பங்குனி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.  இந்த விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, அக்கினி சட்டி ஏந்தியும், பால்குடம் எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் தரம் தூக்கி பிடாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில், தரம் தூக்கி பிடாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில்,  ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, அலகு குத்தியும், கரும்பு தொட்டில் கட்டியும், ஆடு, கோழி பலியிட்டு தங்களது நேர்த்திக்கடன்களை  நிறைவேற்றினர்.


மேலும், நாமக்கல் மாவட்டம் புதுப்பட்டி ஸ்ரீ துலுக்க சூடாமணி அம்மன் கோயிலில் தேரோட்ட திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில், துலுக்க சூடாமணி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. 

தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் துலுக்க சூடாமணி அம்மன் சிறப்பு தோற்றத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.