தமிழ்நாடு

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த ஆடிட்டர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி கொலை வழக்கு விசாரணை - பிப் -17 தள்ளிவைப்பு

Malaimurasu Seithigal TV

சென்னை ஆடிட்டர்  பண்ணைவீட்டில் கொலை

சென்னை மயிலாப்பூரில் உள்ள பிருந்தாவன் தோட்டம் பகுதியை சேர்ந்த 60 வயதான ஆடிட்டர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி அனுராதா ஆகியோர், தங்களது மகள் சுனந்தா, மகன் சஸ்வத் ஆகியோரை காண  அமெரிக்கா சென்று கடந்த ஆண்டு (2022) மே 7ம் தேதி சென்னை திரும்பியுள்ளனர். அடுத்த சில நாட்களிலேயே அவர்களது கார் டிரைவர் கிருஷ்ணா மற்றும் அவரது கூட்டாளி ரவிராய் ஆகியோர் சேர்ந்து கொலை செய்து, சூளேரிக்காட்டில் உள்ள ஆடிட்டர் ஸ்ரீகாந்தின் பண்ணை வீட்டில் ஏற்கெனவே தோண்டி வைக்கப்பட்டிருந்த குழியில் புதைத்துள்ளனர். பின்னர் வீட்டிலிருந்த தங்க நகைகள், வைர நகைகள், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு காரில் தப்பி, தலைமறைவாகினர்.

 நம்பி ஏமாந்த கதை

இந்த கொலை கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய மயிலாப்பூர் காவல் நிலையத்தினர் கிருஷ்ணா, ரவிராய் ஆகியோரை ஆந்திர மாநிலத்தில் கைது செய்து, அவர்களிடமிருந்து ஆயிரத்து 127 பவுன் தங்க நகைகள், 2 வைர மூக்குத்திகள், வெள்ளி நகைகள் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்ததுடன், கொலை மற்றும் கொள்ளை வழக்கில் இருவரையும் கைது செய்தனர்.

பூர்வீக சொத்தை 40 கோடி ரூபாய்க்கு விற்றதாக காரில் வரும்போது ஆடிட்டர் ஸ்ரீகாந்த் செல்போனில் பேசியதை கேட்டு, அந்த பணம் மயிலாப்பூர் வீட்டில் இருப்பதாக நம்பி இருவரும் கொலை கொள்ளையில் ஈடுபட்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.

பிப்ரவரி 17ஆம் தேதி விசாரணை

இந்த வழக்கு சென்னை 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பு சாட்சிகளிடம் விசாரணை தொடங்கியது. அப்போது, ஆடிட்டரின் ஸ்ரீகாந்தின் பக்கத்து வீட்டுக்காரர், மகனின் நண்பர், பக்கத்து வீட்டுக்காரர், உறவினர் சண்முகம் ஆகியோர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். அதன்பின்னர் குற்றம்சாட்டப்பட்ட ரவிராய் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தினார். இதையடுத்து, அடுத்தகட்ட சாட்சி விசாரணைக்காக வழக்கின் விசாரணையை பிப்ரவரி 17ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.